வாடிக்கையாளரின் கடன் வாங்கும் தகுதியை வங்கிகள் எவ்வாறு கண்டு பிடிக்கின்றன

வாடிக்கையாளரின் கடன் வாங்கும் தகுதியை வங்கிகள் எவ்வாறு கண்டு பிடிக்கின்றன.?


இயற்கை குணம் -

ஏற்கனவே எடுத்த கடன்களை நேரத்தில் திருப்பினாரா? பணம் இருந்தாலும் தவணை கட்டாமல் விட்டு விடுவாரா?

செயல் திறன் -

கடன் பணத்தைக் கொண்டு மேலும் பணத்தை ஈட்டினால்தான் வட்டி கட்ட முடியும். பணத்தை கவனத்தோடு முதலீடு செய்தால்தான் கெடு தேதியன்று திருப்ப முடியும்.  இவ்வாறு செய்யும் செயல் திறன் உள்ளவரா?

தன் முதலீடு - வங்கிக் கடனுக்கு ஈடாக வாடிக்கையாளர் தன் சொந்தப் பணம் எவ்வளவு கொண்டு வருகிறார்? நஷ்டம் ஏற்பட்டால் அதைத் தாங்கிக் கொள்ள சொந்த முதலீடு தேவை. நஷ்டம் நீடித்தால் சில காலத்திற்கு மேலும் முதலீடு செய்யும் தேவையும் ஏற்படலாம். சொந்தப் பணம் முதலீடு செய்தால் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பர். வாடிக்கையாளர் தாரளாமாக முதலீடு செய்கிறாரா? தேவைப்பட்டால் மேலும் முதலீடு செய்யக்கூடிய தன் பண பலமோ குடும்ப அல்லது நண்பர் பலமோ உடையவரா?

ஈட்டுப் பொருள்  (அடமானம்) -  கடனுக்கு ஈடாக வாடிக்கையாளரே பொருளை முன்வந்து கொடுப்பது ஒரு வகை. நகைக் கடனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்பொருட்களை வங்கிக்கு அடமானமாகக் கொடுப்பது அவசியம். கடன் எந்தப்பொருட்களை வாங்கத் தரப் படுகிறதோ அப்பொருட்களையும் வங்கிக்கு அடமானமாகக் கொடுத்தே ஆகவேண்டும்.

கார் கடன், வீட்டுக் கடன் போன்றவைகளை உதாரணமாகச் சொல்லலாம். இவற்றின் மதிப்பு போதாது என்று வங்கி நினைத்தால் அதிகப்படியாக வீடு, கம்பெனி பங்குகள், சேமிப்புப் பத்திரங்கள் போன்றவற்றை அடமானம் செய்யுமாறு நிபந்தனை இடலாம்.  தவணைகள் வரவில்லை என்றால் இவற்றை விற்று கடனை அடைக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை வந்தால் அத்தருணத்தில் இந்த ஈட்டுப் பொருட்களின் சந்தை விலை நிலவரம் எவ்வாறு இருக்கும்? கடனை அடைக்கப் போதுமானதாக இருக்குமா?

கடன் சுற்றுச்சூழல் -

வாங்கிய கடனை வைத்து முதலீடு செய்யும் பொருட்கள், தொழில், வணிகம் இவற்றின் பொதுவான நிலைமை எவ்வாறு உள்ளது, நாளை எவ்வாறு இருக்கும்? மக்கள் பொருட்களை வாங்குவது பொதுவாகக் குறைந்தால் நம்மிடம் கடன் வாங்கிய வாடிக்கையாளா¢ன் கடன் திருப்பும் திறனை பாதிக்கும். இத்தகைய பொருளாதாரச் சுற்றுச்சூழல் கடன் கொடுக்கும் சமயத்தில் எவ்வாறு உள்ளது? தவணைகள் செலுத்த வேண்டிய நீண்ட கால கட்டத்தில் இச்சூழ்நிலை எவ்வாறாக இருக்கக் கூடும்?