கிரெடிட் கார்டுன்னா என்ன?

கிரெடிட் கார்டு - விளக்கம்..!


‘’ஏலேய்... அண்ணாச்சி கடையில போய் இந்த லிஸ்டில் இருக்கிற சாமானை எல்லாம் வாங்கிட்டு வா... அந்த சிட்டையை எடுத்துட்டுப் போ!’’ என்று மகனைத் துரத்திவிடுவாள் தாய். அவனும் லிஸ்டைக் கொண்டுபோய் சாமான்களை வாங்கிக்கொண்டு, காசு கேட்கும் அண்ணாச்சியிடம் சிட்டையைக் கொடுப்பான். அவர், அந்த லிஸ்டில் உள்ள பொருட்களுக்கு உரிய தொகையை அந்த சிட்டையில் எழுதிக் கொடுப்பார்.

மாதக் கடைசியில் அந்தச் சிட்டையில் உள்ள தொகையைக் கூட்டிப் பார்த்து கணக்கை பைசல் பண்ணிக்கொள்வார்கள். இது பல காலமாக நம்மூர் கிராமங்களில் நடைமுறையில் இருப்பதுதான். அதேபோல நகரத்துவாசிகளின் கையில் இருக்கும் சிட்டைதான் கிரெடிட் கார்டு! என்ன வித்தியாசம்னா, அண்ணாச்சி கடை சிட்டையை அவர் கடையில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனா, இந்த கடன் அட்டையை பல கடைகளில் பயன்படுத்திக்கலாம்.

நாடும் விலைவாசியும் இருக்கிற நிலைமையிலே இன்னிக்கு மிடில் கிளாஸ் வர்க்கத்துக்குப் பல சமயங்களில் கை கொடுப்பது இந்த கிரெடிட் கார்டுதான். பத்து தேதிக்குப் பிறகு வாங்குற சம்பளம் பத்தாமப் போயிடுது. அதுக்குப் பிறகு ஏதாவது அவசரத் தேவைன்னா கைகொடுக்கறது இந்த கிரெடிட் கார்டுதான்!

கிரெடிட் கார்டுன்னா என்ன?

ஒரு மனுஷனோட வருமானம், வாழ்க்கை முறை, வசதிகள் எல்லாவற்றையும் பார்த்து ஒரு வங்கி இன்னார் இவ்வளவு தொகைக்கு தகுதியானவர்தான்னு எடைபோடும். அந்தத் தொகைக்கு ஏற்ற அளவுக்கு அவர் செலவழிக்க அந்த பேங்க் கடன் கொடுக்கும். அதாவது, இவ்வளவு தொகை வரைக்கும் இவர் செய்யும் செலவுகளுக்கு நான் பொறுப்பு... அவர் செலவழிக்கும் பணத்தை நான் கட்டி விடுகிறேன் என வங்கி அறிவிக்கும். எவ்வளவு செலவழிக்கிறார்னு கணக்குப் பார்க்கவும், கடைகளில் தான்தான் அத்தாரிட்டினு தெரிவிக்கிறதுக்கும் வங்கி அவருக்கு ஒரு கார்டைக் கொடுக்கும்.

அந்த கார்டைக் கொண்டுபோய் கடையில் காட்டி பொருளை வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரரும் அவர் கிட்டே இருக்கிற மெஷினில் இந்த அட்டையைத் தேய்த்த உடன் வங்கியிலிருந்து சில நொடிகளில் வரும் ஆன்லைன் அப்ரூவலைப் பார்த்துட்டு பொருளைக் கொடுத்து விடுவார்.

அந்த மெஷினில் தேய்க்கும்போதே வங்கிக்கு இவர் இவ்வளவு தொகைக்கு இந்த இடத்தில் பொருள் வாங்கியிருக்கார் என்று தகவல் போய்விடும். அந்தத் தொகையை வங்கி அந்தக் கடைக்குக் கொடுத்து விடும். கார்டு வெச்சிருக்கும் ஆளுக்கு மாசத்துக்கு ஒரு தடவை செலவு விவரங்களை அச்சடிச்சு (மின்னஞ்சலிலும் வரும்) ரசீதாக அனுப்பிடும். அவரும் அந்தத் தொகையை வங்கிக்குக் கட்டி விடுவார்.