சும்மா இருந்தால் சூப்பர் வெற்றி - ட்ரையிங் நாட் டு ட்ரை

சும்மா இருந்தால் சூப்பர் வெற்றி - ட்ரையிங் நாட் டு ட்ரை

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘ட்ரையிங் நாட் டு ட்ரை’ என்ற எட்வர்ட் ஸ்லிங்கர்லேண்ட் எழுதியது. சும்மா இருத்தல் என்பது குறித்த சுவையான புத்தகம் இது. இதில் சும்மா இருத்தல் என்பது ஒன்றுமே செய்யாமல் இருத்தல் என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல – ஒருவர் ஒரு விஷயம் குறித்து முயற்சிக்கும்போது அது சிறப்பாக நிகழ வேண்டுமே என பதைபதைக்காமல் /கவலைப்படாமல் இயன்ற அளவுக்குச் செய்துவிட்டு, அது போகின்ற போக்கில் விட்டுவிடுதல் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது. குறிப்பாகச் சொன்னால், கடமையைப் பதைபதைக் காமல் செய்வது என்றும்கூடச் சொல்லலாம்.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வசிக்கும் ஊரில் ஒரு மியூசியத்தில் ’மைண்ட்பால்’ என்ற ஒரு சுவையான விளையாட்டு இருக்கின்றதாம். டேபிளில் இருக்கும் ஒரு பந்தை எதிரே இருக்கும் எதிராளியின் பக்கம் நகர்த்திச் சென்று எல்லைக் கோட்டைத் தொட்டால் வெற்றி என்கின்ற இந்த விளையாட்டில் ஒரு முக்கியச் சூட்சுமம் இருக்கின்றது.


பந்தை நகர்த்த மின்சாரம் வேண்டும். அந்த மின்சாரத்தை நம்முடைய மூளையில் இருந்து பெறவேண்டும். மூளை ரிலாக்ஸ்ட்டாக இருக்கும் போது வெளியாக்கும் ஆல்பா மற்றும் தீட்டா அலைகளைத் தலையில் எலெக்ட்ரோடுகள் அடங்கிய தலைப்பட்டையை மாட்டிக்கொள்வதன் மூலம் கண்டறிந்து, அந்த அலைக்கு ஏற்றவாறு மின்சாரத்தை மேசைக்கு அடியில் உள்ள ஒரு காந்தத்தில் செலுத்தி பந்தை நகரச் செய்யும்படி அந்த விளையாட்டு இருக்குமாம்.

விளையாடும் நபர் எந்த அளவு ரிலாக்ஸ்ட்டாக இருக்கின்றாரோ, அந்த அளவு ஆல்பா மற்றும் தீட்டா அலைகள் மூளையில் இருந்து வெளிப்பட்டு, பந்து எதிராளியை நோக்கி முன்னேறும். விளையாடும் நபர்கள் கண்களை மூடிக்கொண்டும், ஆழமான மூச்சுவிட்டுக்கொண்டும் மூளையே ரிலாக்ஸ் என படாதபாடுபடுவதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். அதிலும், ஒருவர் தீவிரமாக ரிலாக்ஸ் செய்து பந்தை எதிராளியின் எல்லையில் பாதியைத் தாண்டிவிட்டால், எதிராளி பதறிப்போய் பலமிழந்துவிடுவார்.

அதேசமயம், அதுவரை பந்தை ரிலாக்ஸ்ட்டாகத் தள்ளியவரோ பாதித் தாண்டிவிட்டோமே, மீதியையும் முடித்தால் பரவாயில்லையே என நினைத்து கவலைப்பட ஆரம்பித்து ரிலாக்ஸேஷன் குறைந்து ஆல்பா மற்றும் தீட்டா அலைகளை இழப்பார். இப்படி இரண்டு பிளேயர்களும் கூலாகவும், படபடப்பாகவும் மாறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், நமக்கு லாபம் தரக்கூடிய ஒரு விஷயத்தில் நடப்பது நடக்கட்டும் என நினைத்து ஒரு விஷயத்தில் சும்மா இருப்பது ரொம்பக் கஷ்டம் என்பதைச் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார் ஆசிரியர்.
பெரும்பாலும் கலை உலகத்தில் இருப்பவர்களே இந்தச் சும்மா இருப்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 ஜாஸ் இசையில் பிரசித்தி பெற்ற ஸாக்சபோன் இசைக்கும் சார்லி பார்க்கர் ஸாக்சபோன் பழகும் இளைஞர்களிடத்தில், ‘நீங்கள் ஸாக்சபோனை வாசிக்காதீர்கள். ஸாக்சபோன் உங்களை வாசிக்கட்டும்’ என்று அறிவுரை சொல்வாராம். நடிகர்களுக்கும் இது பொருந்தும். வெறுமனே ஸ்க்ரிப்டைப் படித்து மனப்பாடம் செய்து வசனம் பேசினால் சூப்பர் எனச் சொல்லமாட்டார்கள். தன்னை மறந்து நடிக்கும் கதாபாத்திரமாக மாறினால்தானே ஆஸ்கார் கிடைக்கின்றது. எதையாவது செய்ய வேண்டும் என்று அங்குமிங்கும் பார்த்து, காப்பி அடித்தால் இணையத்தில் கிழிக்கவல்லவா செய்கிறார்கள்?

ஆனால், ஒரு நடிகர் சும்மா இருப்பது சுலபமான விஷயமா என்ன? முக்கியமான தருணத்தில் சும்மா இருப்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை என பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகின்றார் ஆசிரியர். அதேசமயம் அந்த முக்கியமான தருணங்களில் ரிலாக்ஸ்ட்டாகச் சும்மா இருந்தால், அதீத வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகரிக்கின்றது என்பதையும் தெளிவாகச் சொல்கின்றார் ஆசிரியர். பலிபீடத்தில் காளைகளைப் பலியிடும் ஒரு இறைச்சி வெட்டுபவராக இருந்தாலும் சரி, நுணுக்கமான மரவேலைகளைச் செய்யும் ஒரு தச்சு வேலைக்காரரானாலும் சரி, அவர்கள் கருமமே கண்ணானவராக மாறும்போது மட்டுமே வேலை சிறப்பாக நடக்கின்றது என்கின்றார்.

சீனாவில் ஒரு பலிபீடத்தில் பலிபோடும் வேலையில் இருப்பவரை, அது எப்படிங்க அரசரே முன்னால் இருக்கும் போதுகூட நீங்க பலிபோடும்போது அவ்வளவு நேர்த்தியாக இம்மி பிசகாமல் வருகின்றது? என்று கேட்டதற்கு, ஆரம்பத்தில் நான் பலியிடத் தொடங்கியபோது பலி கொடுக்கப்படும் மிருகம் என் கண்ணுக்குத் தெரிந்தது. மூன்று வருடங்களுக்குப்பின் எனக்கு மிருகம் தெரிவதேயில்லை. என் தெய்வீக கடமைதான் மனதில் இருக்கின்றது. இறைவன் எந்த அமைப்பில் மிருகங்களைப் படைத்திருக்கின்றான் என்பது எனக்கு முழுமையாய்ப் புரிந்துவிட்டது.

அதுவே என் கத்தியை சரியான பாதையில் பயணிக்கச் செய்கின்றது. அதனாலேயே, பலிபோடும்போது அதை நேர்த்தியாய்ச் செய்ய முடிகின்றது என்று சொன்ன அவர், திறமையான கசாப்புக்கடைக்காரன் வருடத்துக்கு ஒருமுறை கத்தியை மாற்றினால் போதும். ஆனால் திறமை குறைவாய் உள்ளவனோ மாதாமாதம் மாற்ற வேண்டும் என்றாராம்.

அரசருக்காக ஒரு மர வேலைப்பாடு களைச் செய்யும் தச்சரிடம் இது எப்படிச் சாத்தியம் என்று கேட்டதற்கு, முதலில் நான் பாராட்டு, புகழ், திட்டு, தண்டனை எல்லாவற்றையும் மறந்துவிடுவேன். அப்புறம் என்ன கலை புகுந்து விளையாட ஆரம்பித்துவிடும் என்றாராம். எப்படி இதையெல்லாம் மறப்பது சாத்தியம் என்று கேட்டதற்கு, முதலில் மனதை சலனமில்லாமல் மாற்றி என் முழு எனர்ஜியையும் கையகப்படுத்து வேன்.

இதற்கு நான் செய்யும் முதல் காரியம் விரதம். முதல் மூன்று நாட்கள் விரதம் இருந்தால் இது சாத்தியம். விரதம் ஐந்து நாட்கள் தாண்டியபின் புகழ், தண்டனை எல்லாம் மறந்துபோகும். ஏழு நாட்கள் தாண்டியபின் கைகால் இருப்பதே மறந்துவிடும் என்றாராம். கைகால் இல்லாமல் எப்படி தச்சுவேலையை அபாரமாய்ச் செய்ய முடியும் என்பது பிதற்றலாய் உங்களுக்குத் தோன்றும் என்றாலும், எதிர்பார்ப்பற்ற/பின்விளைவு குறித்துக் கவலைப்படாத அளவு கடந்த ஈடுபாடு என்ற ஒன்றே செய்யும் செயலில் சிறப்பை செழிக்க வைக்கும் என்பதுதான் நிஜம் என்கின்றார் ஆசிரியர்.

சும்மா இருப்பதன் லாபத்தைக் கோடிட்டுக் காட்டும் ஆசிரியர் சீனாவின் நீதிக்கதைகளில் ஒரு கதையை அவருடைய பயிற்சி வகுப்புகளில் (இதனை அவர்கள் யாரும் செய்துபார்க்கக் கூடாது என்ற கண்டிஷனுடன்!) அடிக்கடி சொல்வேன் என்கின்றார். அந்தக் கதையில் கடுமையான குடிபோதையில் இருந்த ஒருநபர் வேகமாக ஒடும் மாட்டுவண்டியிலிருந்து கீழே விழுந்துவிட, பெரிய எலும்புமுறிவுக் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்து விடுகின்றார். எப்படி தெரியுமா? குடிபோதையில் இருப்பவர் பொதுவாக உடம்பை டைட்டாக வைத்துக்கொள்வதில்லை. லூசாகவே வைத்துக் கொள்வார்கள். அதனாலேயே வண்டியிலிருந்து விழுந்தவர் ஒரு தற்காலிக ஜிம்னாஸ்டிக் கலைஞராக மாறிவிடுகின்றார். அதனாலேயே எலும்புமுறிவு ஏற்படவில்லை என்கின்றார் ஆசிரியர்.

ஏன் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை என்று கேட்கும் ஆசிரியர், அது மனிதனின் பிறவிக்குணம் என்கின்றார். பிறவியிலேயே நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பெரிதாக முயற்சிக்காமல் இருந்தால் அது பெரிய கேடாய்ப் போய் முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உலகத்துக்கு வருகின் றோம் என்கின்றார். நம்முடைய வாழ்க்கைமுறை கல்வி போன்றவையும் இந்தவகை எண்ணத்தையே அதிகரிக்கச் செய்கின்றன என்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள உலகமும் புகழ், பணம், பவர், உணவு என எல்லா தேவையையும் நாம் பூர்த்தி செய்தேயாக வேண்டும் என்றும், அதற்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாகச் செய்யவேண்டுமே என்ற கவலை கொள்ள வேண்டும் என்றே நம்மை வளர்த்தெடுகின்றது என்கின்றார்.

சரி, சும்மா இருக்க வேண்டும் என நினைப்பதே ஒரு கவலையாகிப் போகின்றதே. இது ஆசையே படக்கூடாது என்று ஆசைபடுவதைப்போல் அல்லவா இருக்கின்றது என்று கிண்டலடிக்கின்றார். வெற்றி என்பது ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டும், தீவிரமாக முயற்சித்துக் கொண்டும் இருப்பதாலேயே கிடைத்துவிடுவ தில்லை என்பதைப் புரிந்துகொண்டும், நடப்பவற்றை நடக்கும் வழியிலேயே நடக்கவிடுவ தனாலும் பல அனுகூலங்கள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் புத்தகத்தை எல்லா விஷயத்துக்கும் பதைபதைக்கும் அனைவருமே ஒருமுறை படிக்கலாம்.