நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


ஐஸ்கிரீம் கடை, ஓட்டல் நடத்துவது, தமிழகத்திலிருந்து சினிமாவை வாங்கி மும்பையில் திரையிடுவது, புத்தக விற்பனை என ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பல வேலைகள் செய்தும், எதிலும் எனக்கு திருப்தி இல்லை. எனக்கான வேலை இதுவல்ல என்று மட்டும் என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு அந்த வேலையை செய்யப் பிடிக்காமல் அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆனால், நானும் ஒருநாள் வெற்றியாளனாக வலம் வருவேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.
பிழைப்புக்காக மும்பை போய், அங்கிருந்து சென்னை திரும்பியபிறகு தொலைக்காட்சியில் சின்ன சின்னதாக பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். ஆனால், அதன் மூலம் பெயரோ, வருமானமோ எனக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் அமிதாப்பச்சனின் பேட்டியை படித்தேன். 'நீ வெற்றியாளனாக இருக்கும்போது உன் வீட்டில் பூங்கொத்துகள் நிரம்பி வழியும். உன் வீட்டில் பூங்கொத்துகளின் எண்ணிக்கை எப்போது குறைகிறதோ, அப்போது நீ சரியத் தொடங்கிவிட்டாய் என்று அர்த்தம்!’ என நடிகர் ராஜேஷ்கன்னாவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார் அமிதாப்.
இந்த பேட்டி எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியையும் பாய்ச்சலையும் எனக்குள் ஏற்படுத்தியது. அப்போது என் நண்பர் சாய்ராம் நீயா, நானா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நான் இணைந்துகொண்டதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனைக்கான முதல் படி.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி சில வாரங்கள்  கழிந்தபிறகும் வரவேற்பு இல்லாமலே இருந்தது. வரவேற்பு இருந்தால்தானே வாய்ப்புகள் இருக்கும். மீண்டும் புதிய முயற்சிகளோடு வாய்ப்புகள் தேடுவது சாமானிய வேலையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து போன் வந்தது. ''நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்'' என்றார்கள். என் உழைப்பின் மீது முழுநம்பிக்கை வந்த தருணம் அதுதான். எனக்கான களம் இதுதான் என்று எனக்கே நம்பிக்கை கொடுத்தது இந்த நிகழ்ச்சிதான்.