தொழில் முன்னேற்றத்துக்கு உதவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்!
தொழில் முன்னேற்றத்துக்கு - Louder Than Words
புத்தகத்தின் பெயர்: லெளடர் தன் வேர்ட்ஸ் (Louder Than Words)
ஆசிரியர்கள்: Joe Navarro ,Toni Sciarra Poynter
பதிப்பாளர்: HarperCollins Publisher
இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ஜோ நாவாரோ மற்றும் டோனி சியாரா பாய்ண்டர் என்ற இருவரும் இணைந்து எழுதிய ‘லவ்டர் தன் வேர்ட்ஸ்’ எனும் புத்தகத்தை. வார்த்தை களால் வெளிப்படுத்தாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின் (நான்-வெர்பல் இன்டெலிஜன்ஸ்) மூலம் உங்களுடைய பணி மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு எப்படி வழிவகுப்பது என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
உலகம் ஒவ்வொரு நிமிடமுமே வார்த்தைகளால் அல்லாத வழிகளில் தகவல்களைப் பரிமாறிக்கொண்டே இருக்கிறது. நடை, உடை, பாவனை, பேசும் தொனி, உணர்ச்சிகளை வெளிக்காட்டுதல், கையில் வைத்திருக்கும் போன், கழுத்தில் இருக்கும் செயின், வந்திறங்கும் மோட்டார் வாகனம், நம்மை அறியாமலேயே நம்முடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மேனரிசங்கள் போன்ற அனைத்துமே வார்த்தைகளால் அல்லாத பேச்சுக்கு சமமான விஷயங்களே என்கிறார்கள் ஆசிரியர்கள்.
நான்-வெர்பல் இன்டெலிஜன்ஸ் என்பது நாம் வைத்திருக்கும் நிறைய புரோகிராம்கள் அடங்கிய கம்ப்யூட்டர் மாதிரி. கம்ப்யூட்டருக்கு எவ்வளவோ திறன் இருந்தும் நாம் உபயோகிப்பது என்னவோ ஒரு சிலவற்றைத்தான். அதே போலத்தான் நான்-வெர்பல் இன்டெலிஜன்ஸும் என்கிறார்கள் ஆசிரியர்கள். சாஃப்ட்வேரைப் போலவே, நான்-வெர்பல் இன்டெலிஜன்சும் ஆக்டிவேட் செய்து, பயன்படுத்தப்பட்டு அவ்வப்போது அப்க்ரேடும் செய்யப்படவேண்டும் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.
இரண்டு நிறுவன செயல்பாட்டுச் சூழல்களை சொல்லி புத்தகத்தை ஆரம்பிக்கிறார்கள் ஆசிரியர்கள். ஒரு வியாபார விஷயமாக இரண்டு நிறுவனங்களை நீங்கள் அணுகுகிறீர்கள். முதல் நிறுவனத்துக்கு செல்கிறீர்கள். கசாமுசா என்று இருக்கிறது வாசல். நிறுவனத்தில் நுழைந்தவுடனே செக்யூரிட்டி சலிப்பாய் ஒரு கடிதத்தை உங்கள் முன்னால் தள்ளுகிறார். உங்கள் விவரங்களை பதிகிறீர்கள். உங்கள் ஐடியை காண்பியுங்கள் என்கிறார். பின்னர் போனை எடுத்து நீங்கள் வந்திருப்பதைச் சொல்லி நாலாவது மாடிக்கு போங்கள் எனச் சொல்லி லிஃப்ட் இருக்கும் திசையை நோக்கி அசால்ட்டாய் கைகாட்டுகிறார்.
நீங்கள் அங்கு போனால், நாலாவது மாடியில் ரிசப்ஷனில் இருக்கும் பெண் போன் பேசிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் உங்கள் சொந்த முயற்சியில் அவளுடைய பேச்சுக்கு நடுவே உங்கள் பெயர் மற்றும் விவரம் சொல்கிறீர்கள். பேசிக்கொண்டே உங்களை உட்காரச் சொல்லி சைகை செய்கிறார் அவர்.
பத்து நிமிடம் ஆகிறது. டீபாயில் இருக்கும் புத்தகங்களை புரட்டுகிறீர்கள். ‘மேடம், ரெஸ்ட் ரூம் எங்கே?’ என்று கேட்டு போய்வருகிறீர்கள். இது எல்லாம் முடிந்த பின்னர், நீங்கள் பார்க்கவந்த நபர் வருகிறார். முழுக்கை சட்டையை முக்கால் அளவு மடித்துவிட்டு, டையை லூஸாக்கிய வண்ணம் அவர் இருப்பதிலிருந்தே அவர் எக்கச்சக்க பிசியாக இருந்து இப்போதுதான் ஃப்ரீயாகியுள்ளார் என்பது தெரிகிறது.
மீட்டிங் ரூமுக்கு செல்கிறீர்கள். அவருக்கு போன் வருகிறது. அதைப் பேசி முடித்த பின்னர், ‘சொல்லுங்கள் சார்...’ என்று ஆரம்பிக்கிறார். அவருடன் பேசி முடித்துவிட்டு, அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரும் போது உழைத்துக் களைத்த மாதிரி ஒரு சலிப்பு.
அடுத்து, இன்னொரு அலுவலகத்துக்கு செல்கிறீர்கள். பளிச் என்று இருக்கிறது நுழைவாயில். சின்னதாய் கார்டன் வேறு பூக்களுடன் இருக்கிறது. செக்யூரிட்டியிடம் உங்கள் பெயரைச் சொன்னவுடனே, ‘‘சார், நீங்க வருவீங்கன்னு சொல்லியிருக்காங்க. உள்ளே கொஞ்சம் தூரம் போய் இடதுபுறம் திரும்பியவுடன் லிஃப்ட் இருக்கிறது. அதில் சென்று இரண்டாவது மாடிக்கு போய் ரிசப்ஷனிஷ்டை பாருங்கள்’’ என்கிறார்.
நீங்கள் இரண்டாவது மாடியில் நுழையும் வேளையில் ரிசப்ஷனிஸ்ட் போன் பேசிக்கொண்டிருக்கிறார். உங்களைப் பார்த்தவுடன், அதை ஹோல்டில் போட்டுவிட்டு, ‘‘சொல்லுங்கள் சார்...’’ என்று கேட்கின்றாள். நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்கிற விவரத்தைச் சொன்னவுடன் அலுவலகத்தின் உள்ளே தகவல் சொல்கிறார்.
‘‘ஒரு நிமிடம் உட்காருங்கள்’’ என பணிவாய் சொல்கிறாள். அடுத்த இரண்டாவது நிமிடமே நீங்கள் சந்திக்கவேண்டிய நபர் பளிச்சென்று மிடுக்கான உடையுடன் உங்களை கைகுலுக்கி வரவேற்கிறார். மீட்டிங் ரூமுக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடித்த ஜூஸ் வருகிறது. அதைப் பார்த்த பின்புதான் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது, காலையில் அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் செய்யும்போது, நீங்கள் காபி/டீ/ஜூஸில் எதை விரும்பிக் குடிப்பீர்கள் என்று கேட்டார்கள் என்பது.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நான்-வெர்பல் என்பது எது என்று உங்களுக்கு புரிகிறதா? அலுவலகத்தின் தோற்றம், செக்யூரிட்டியின் ஈடுபாடான சேவை மற்றும் தயார் நிலை, வழிசொல்ல கை காட்டியது / திசை மற்றும் திருப்பத்தை பணிவாய் சொன்னது, ரிசப்ஷனிஷ்ட்டின் குறைந்தபட்ச கவனத்தைப் பெற்றது / அதிகபட்ச கவனத்தைப் பெற்றது, எவ்வளவு நேரம் நீங்கள் காத்திருந்தீர்கள் என்பது, உங்கள் மீது அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறை (என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டது), சந்திக்கவேண்டிய நபர் வந்து உங்களுடன் கைகுலுக்கியது, உங்களைவிட போனுக்கு அதிக மதிப்பு கொடுத்தது போன்றவையே நான்வெர்பல் விஷயங்கள் ஆகும்.
இதெல்லாம் இந்தக் காலத்தில் போய் யாராவது பார்க்கிறார்களா என்ன என்கிறீர்களா? கடைசியாக நீங்கள் வியாபாரத்தினை துண்டித்துக்கொண்ட நிறுவனத்தை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த நான்-வெர்பல் விஷயங்கள் பலவுமே அவர்களுடன் நீங்கள் வியாபாரத்தை துண்டித்துக்கொள்ள காரணமாய் இருந்திருக்கும்.
நான்-வெர்பல் விஷயங்கள் கண்ணுக்கு புலப்படாத அல்லது போதிய அங்கீகாரம் பெறாத விஷயமாக தோன்றினாலும் அது அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பேசும்போது தலை, கை போன்றவற்றின் உபயோகம், தோற்றம் (அப்பியரன்ஸ்) பற்றியெல்லாம் கவலையில்லை; திறமை சிறப்பாய் இருந்தால் போதும் என்று நாக்கு சொன்னாலும் தோற்றம் பெரும்பான்மையான சமயம் பெருமளவில் கைகொடுக்கிறது.
பேச்சில் தெறிக்கும் தொனி, ஒருவர் பேசுவதை ஈடுபாட்டுடன் காது கொடுத்து கேட்பது போன்ற நான்-வெர்பல் விஷயங்களே ஒரு பிசினஸ் கைகூடுவதற்கும் கையை விட்டுப் போவதற்கும் இடையே உண்டான வித்தியாசத்தை கொண்டு வருகிறது என்கிறார்கள் ஆசிரியர்கள். இது குறித்து பல்வேறு உதாரணங்களையும் அவர் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்கள்.
வார்த்தை வாயில் வருவதற்குள்ளாகவே உடல் அதனை பல்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்திவிடும். அதைப்போலவேதான் நிர்வாகத்தின் எண்ணங்கள் அலுவலகத்தில் நடக்கும் நடவடிக்கைகளின் மூலம் வெளிப்பட்டுவிடும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
குறை சொல்லவந்த ஒருவரைக்கூட செளகரியமாய் அமர வைத்து தண்ணீர் மற்றும் காபி/டீ கொடுத்து கேட்டீர்கள் என்றால், பதமாய் சொல்லிச்செல்வார். அதே நபரை ஒரு அசெளகரியமான இடத்தில் அமரவைத்து கேட்டால், பதற்றமாகி பயங்கரமாக திட்டிவிடுவார் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
உங்கள் குரலின் வலிமை, நீங்கள் யாருடன் சேர்ந்து செயல்படுகிறீர்கள் என்பது, ஜன்னலில் அடிக்கப்பட்டிருக்கும் பெயின்ட், முதலில் சொல்லப்படும் ஹலோ போன்றவையெல்லாம் நான்-வெர்பல் விஷயங்கள் செய்யும் மேஜிக் அனைத்தையும் செய்து காட்டிவிடும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
கடைசியாய் ஆசிரியர்கள் சொல்வது, நகைச்சுவை பற்றி. நகைச்சுவை உணர்வு என்பது ஒரு மிகப் பெரிய நான்-வெர்பல் விஷயம். கார், பங்களா, பேங்க் பேலன்ஸ் என எல்லாவற்றையும் வைத்திருக்கும் மனிதர்கள் பலரும் நகைச்சுவை உணர்வை வைத்திருப்பதில்லை. இந்த உணர்வு என்பது ஒரு சீரிய நான்-வெர்பல் விஷயமாகும். இது இருந்தால் எத்தனை பெரிய டீல்களையும் சுலபத்தில் நம்முடையதாக்கிக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
பொதுவாக, நான்-வெர்பல் என்றால் உடல்மொழி என்று மட்டுமே நம்மில் பலரும் நினைக்கின்றோம். அதையும் தாண்டிய பலவும் இதனுள் அடங்குகிறது என்பதையும், அவற்றை எப்படி சரியான விகிதத்தில் அதிகப்படுத்தி நமக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்வது என்பதையும் சொல்லும் இந்த புத்தகத்தை அனைவருமே ஒரு முறை அவசியம் படிக்க வேண்டும்.