வாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்!

வாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்!



வளம்பெறும் குடும்பங்கள்!


நிதித் திட்டமிடல் என்கிற இரண்டு வார்த்தைக்குள் பத்து விஷயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள, இந்தப் பத்து விஷயங்களை ஒவ்வொருவரும் தங்களது முதலீட்டு எண்ணங்களாக உருவாக்கிக் கொள்வது முக்கியம். அந்த எண்ணங்களே நமது வாழ்க்கையின் எதிர்கால குறிக்கோள்களை அடைய உதவி செய்யும். முக்கியமான இந்தப் பத்து விஷயங்களை பத்து  நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். இந்த விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், அவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் தங்களது நிதித் திட்டமிடலை வெற்றிகரமாகக் கையாளும் பத்து குடும்பங்களையும் கண்டுபிடிக்க நமக்கு உதவினார்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் அந்தப் பத்து விஷயங்கள் இதோ...


1திட்டமிட்டால்தான் தித்திக்கும் வாழ்க்கை!

முதலில், திட்டமிட்டு வாழ்வதன் அவசியம் குறித்து விளக்கினார் நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷ். “தேவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை மாறி, எதிர்காலத் தேவைகளை வகைப்படுத்தி அதற்காக திட்டமிட்டு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய மனிதர்களின் மனதில் பெருகி வருகிறது. என் வாடிக்கையாளர்களில் ஒருவரான ராக்கி, தனது 30-வது வயதில் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார். எதிர்காலக் குறிக்கோள்களில் அவருக்கு இருந்த தெளிவு என்னைச் சற்று வியக்கவே செய்தது. அவருக்காக நான் செய்துதந்த நிதித் திட்டமிடலை முழுமையாகப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கல்விக்கு, திருமணத்துக்கு, ஓய்வுக்காலத்துக்கு என தனது சம்பாத்தியத்திலிருந்து ஒரு பகுதியை முதலீடாகச் செய்து வருகிறார்.
இவரின் குழந்தை, கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளும்போது முதலீடுகள் பெருகி இருக்கும் என்பதால், இவர் கல்விக் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அதேபோல, குழந்தைகளின் திருமணத்துக் காகவும், தனது ஓய்வுக்காலத்திலும் யார் கையையும் எதிர்பார்க்கும் நிலையை இவர் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் ஏற்படுத்தாது. ஆகையால், எல்லோரும் அவரவர்களின் குடும்பங்களுக்கான குறிக்கோள்களைக் குறித்துக்கொண்டு, அதற்கான முதலீட்டுத் திட்டங்களைத் திட்டமிடுங்கள். அப்போதுதான் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு இருக்கும், வாழ்க்கையும் வளமடையும்” என்றார்.



‘‘திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்!’’

திட்டமிடல் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், தொழிலே கதி என்று இருந்து, திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட சேலம் கிருஷ்ணனிடம் பேசினோம். “சுயமாகத் தொழில் செய்துவரும் எனக்கு, ஆரம்பத்தில் எதிர்காலத் தேவை குறித்த எண்ணமும், அதற்கான திட்டங்களும் இல்லாமல் இருந்தது. லாபமாகக் கிடைக்கும் பணத்தைத் திரும்பவும் தொழிலுக்குப் பயன்படுத்தி வருமானத்தைப் பெருக்க மட்டும் செய்தேனே தவிர, குடும்பத்தின் எதிர்காலத் தேவைகள் என்ன, அதற்காக எப்படி முதலீடு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் நிதி ஆலோசகரைச் சந்தித்துப் பேசியபோதே திட்டமிடல் குறித்த முக்கியத்துவம் புரிந்தது எனக்கு. முதலில் கல்வித் தேவைக்காக முதலீட்டை ஆரம்பித்தேன். அதன்பிறகு என்னைப் போன்றவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பிஎஃப், பணிக்கொடை போன்றவைக் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு, அதற்காக ஒரு தொகையை முதலீடு செய்ய ஆரம்பித்தேன். இன்றைய நிலையில் தொழிலும் சிறந்து விளங்கு வதால் சொல்லிக்கொள்ளும்படியாக வருமானமும் கிடைக்கிறது. முதலீட்டை செய்து வருவதால், எதிர்காலத் தேவைகள் குறித்து கவலையும் இல்லை” என்றார் சந்தோஷமாக.

2அவசரத்தில் கைகொடுக்கும் அவசரகால நிதி!

பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு எது முக்கியமோ இல்லையோ, அவசரகால நிதியானது அவசியம் தேவை. அதுகுறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் எஸ்.பாரதிதாசன். “ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து ஒரு குடும்பமே இயங்கும்  சூழ்நிலையில், ஏதோவொரு காரணத்துக்காக திடீரென்று அவரின் வேலை பறிபோனாலோ அல்லது அவராகவே விரும்பி வேலையை விட்டாலோ, அடுத்த வேலை கிடைக்கும் வரை மொத்தக் குடும்பமும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும். அந்த நபர் அவசரகால நிதிச் சேமிப்பை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால், அதுபோன்ற சமயத்தில் அந்தத் தொகை ஆபத்பாந்தவனாக விளங்கும்.
பொதுவாக, ஒரு குடும்பத்தின் 3 - 6 மாதத்துக்குத் தேவையான செலவுத் தொகையை அவசரகால நிதியாகச் சேமித்து வைத்திருப்பதே நியதியாகும். இந்தத் தொகையை ரொக்கமாக கையில் வைக்காமல் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைக்கும்போது ஏறக்குறைய 8% தினசரி கூட்டு வட்டி விகிதத்தில் வளர்ந்துகொண்டு இருக்கும். அதனால், இந்த அவசரகால நிதிக்கு அனைத்துக் குடும்பங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.



‘‘எப்போதும் இருக்கும் அவசரகால நிதி!’’

தொழிலில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், குடும்பத்தின் அவசரகாலத் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ள எனது வங்கி சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணத்தை அவசரகால நிதியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்கிறார் செய்யாறைச் சேர்ந்த மணி.

“நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். நான் செய்துவரும் தொழில் மூலமாகப் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமே தவிர, எப்போதும் லாபம் இருந்துகொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அதிக லாபம் கிடைக்கும்போது, அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவசரகால நிதியாகச் சேமித்து வந்தேன். தற்போது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் அளவுக்கு அதில் பணம் சேர்ந்திருக் கிறது. அதனால் தொழிலின் எதிர்காலம் குறித்த கவலை இல்லாமலும், பயமில்லாமலும் வாழ்கிறேன்” என்றார், நம்பிக்கையாக.

3.சரியான கடனே சங்கடங்களைத் தவிர்க்கும்!

கடன் நல்லதுதான், ஆனால் எல்லாக் கடன் களையும் நல்லது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்றைய நவீன உலகில் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள, அனைத்துக் கடன் வசதி களும் உள்ளன. இது இன்றைய மனிதர்களை கடன் வாங்க பெரிதும் தூண்டுகின்றன. எந்தக் கடன் வாங்கலாம் என்பது குறித்து சொல்கிறார் நிதி ஆலோசகர் ராஜசேகரன்.



“ஆசையைக் கட்டுப்படுத்தாமல் கடன்களை அதிகரிக்கும்போது கடன் வழங்கியவர்கள் லாபமடைவதுடன், நமது முன்னேற்றம் தடைபடும். பொதுவாக, நமது முன்னோர்கள் சம்பளத்தைச் சேமிப்பாகத்தான் பார்த்தனர். ஆனால், இன்றைய மனிதர்கள் கடனுக்கான இஎம்ஐ கட்டுவதற்காகவே சம்பாதிக்கிறார்கள். தேவையறிந்து கடன் பெறும்போது கடன் நல்லதுதான். ஆனால், அதிலும் கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், கந்துவட்டி கடன் என்கிற மாதிரியான கெட்ட கடன்களைத் தவிர்த்துவிடுவதே நலம். இது ஆபத்துக்கே வழிவகுக்கும். கல்விக் கடன், வீட்டுக் கடன் என்கிற கடன்கள் அந்தந்த தேவைக்காக வாங்கிப் பயன்படும்போது வீண் சங்கடங்களைத் தவிர்க்கலாம்” என்றார்.

‘‘ஆதாயமிருந்தால் கடன் பெறுவேன்!’’

புதுச்சேரியைச் சேர்ந்த மதிவாணன், கடன் பெறுவதில் சரியான முறையைக் கையாண்டு வருகிறார், அவரிடம் பேசினோம். “பொதுவாக எல்லோரும் ஏதாவதொரு சமயத்தில் கடனை வாங்கித்தான் ஆகவேண்டும். அப்படியிருக்க, நான் ஒரு வியாபாரி, எனக்கும் கடனுக்கும் மிகுந்த தொடர்பிருக்கிறது. அநாவசிய செலவுகளுக்காக நான் ஒருபோதும் கடன் வாங்கியதில்லை. மாறாக, தொழில் வளர்ச்சிக்காக வங்கியில் தொழில் கடனை வாங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களில்  சிலர், அவர்களின் நண்பர்களிடமெல்லாம் கைநீட்டி கடனை வாங்கிக் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், எனக்கு அந்தப் பழக்கமும் கிடையாது. நாம் வாங்கும் கடன் நமக்கு ஆதாயத்தைத் தரவேண்டுமே தவிர, முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருக்கக்கூடாது. நான் கிரெடிட் கார்டு வைத்திருந்தேன். அந்தச் சமயங்களில் வகைதொகை இல்லாமல் செலவு செய்ததால், என் மனைவி சுதாரித்துக்கொண்டு அந்தக் கார்டை உடைத்து கிரெடிட் கார்டு கொடுத்த வங்கியிடம் ஒப்படைத்துவிட்டார்” என்றார் மிகச் சரியான உதாரணத்துடன்.

4.சேமிக்க மட்டுமில்லை, செலவுகளுக்கும் திட்டமிடுங்கள்!

‘‘வருமானம் பெருக வேண்டுமெனில் செலவு களும் அதிகரிக்க வேண்டும். ஆனால் அந்தச் செலவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார், நிதி ஆலோசகர் இஜாஸ் ஹுசைன். இவரிடம் திட்டமிட்டுச் செலவு செய்வதிலுள்ள சாதகமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். “செலவுகள் அவசியமானது தான். ஆனால், அந்தச் செலவுகள் அவசியம்தானா அல்லது அநாவசியமா என்பதை ஆராய வேண்டும். அதனால் சேமிப்பதற்காகத் திட்டமிடுவதுபோல, செலவுகளுக்காகவும் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது. சம்பள நாளன்று ஒவ்வொருவரும் மனநிலையை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள். ‘இன்று என் 100 சதவிகித வருமானத்தில், 20 சதவிகிதம் என் செலவுக்குச் சொந்தமானது கிடையாது. அது சேமிப்புக்குச் சொந்தமானது. மீதி இருக்கும் 80 சதவிகிதத் தொகையை வைத்துதான் வரும் மாதத்துக்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.' இந்த மனநிலையானது ஒவ்வொரு மாதத்தின் சம்பள நாளன்றும் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் செலவுக்கான திட்டமிடலுடன், சேமிப்புக்கான தொகையும் ஒதுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இன்றைய நிலையில் ஒரு பொருளை வாங்க ஆகும் செலவு, இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து அதே பொருளை வாங்கும்போது அதிகமான தொகை கொடுத்து வாங்க வேண்டியதாயிருக்கும். அதனால் அப்போது செய்யும் செலவுக்காக இப்போதிருந்தே திட்டமிட்டு சேமிக்க வேண்டியது அவசியம்” என்றார்.



‘‘முதல் செலவு சேமிப்புதான்!’’

செலவுக்காகத் திட்டமிடுவது குறித்து பெரம்பூரில் வசிக்கும் சுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘என் முதல் செலவே சேமிப்புதான். தற்போது எனக்கு வயது 60 ஆகிறது. என் இளம் வயது முதல் இன்று வரை வரவுக்கு ஏற்றபடியே செலவுகளைச் செய்துவருகிறேன். செலவு செய்வதற்குமுன் அந்தச் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என்று ஆராய்வதால், பணம் மிச்சமாகிறது. அதேபோல, ஆசையினால் தூண்டப்பட்டுக் கடன் வாங்கிச் செலவு செய்யும் பழக்கமும் எனக்குக் கிடையாது” என்றார் தெளிவாக.

5.இன்றியமையாதது இன்ஷூரன்ஸ்!

இன்றைய நிலையில் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு, பெரும்பாலானவர்கள் பாலிசி எடுத்து வருகிறார்கள். நிதித் திட்டமிடலில் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம் குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கரிடம் பேசினோம். “பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ஒருவருக்குப் பாதுகாப்பாக இருப்பது போல, வாழ்க்கை என்னும் பயணத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இன்ன்ஷூரன்ஸ் பாதுகாப்பாக இருக்கும். அதனால் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் இன்றியமையாததாகிறது. உதாரணத்துக்கு, என் வாடிக்கையாளர் முருகன், தனது வருமானத்தின் அடிப்படையில் 15 மடங்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருந்தார். திரென்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட, டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த தொகை அவரின் குடும்பத்தாருக்கு பயன் தருவதாய் அமைந்தது. அதேபோல, இன்னொரு வாடிக்கையாளர் ரகு, தனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துவைக்க, அவரின் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் மருத்துவச் செலவை சமாளிக்க முடிந்தது. ஆக, யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது இன்றிய மையாதது” என்றார்.



‘‘எனக்குப் பிறகு என் இன்ஷூரன்ஸ்!’’

“இன்ஷூரன்ஸ் என்பதை என் நண்பர்களில் பெரும்பாலானவர்களும் முதலீடாகவே நினைத்து வந்தார்கள். அவர்களிடம் இன்ஷூரன்ஸ் முதலீடு கிடையாது, பாதுகாப்புக்குத்தான் என்பதை எடுத்துச் சொல்லி புரியவைத்திருக்கிறேன். ஆனால், நான் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணமே, எனக்குப் பிறகு நான் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் தொகை என் குடும்பத்துக்குப்  பயன்படும் என்பதுதான். இன்றைய நிலையில் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் (மருத்துவக் காப்பீடு) போதுமான அளவுக்கு இன்ஷூரன்ஸ் இருப்பதால், எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்கிறேன்” என்றார், மதுரையைச் சேர்ந்த கே.ஏ.ஆனந்த்.

6.வருமானம் பெருக பிரித்து முதலீடு செய்யுங்கள்!

ஒருவருடைய முதலீடா னது ஒரே திட்டத்தில் இருந்தால் ரிஸ்க் அதிகம் என்பதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியும் பெரிய அளவில் இருக்காது. அதனால்தான் நாம் செய்யும் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள். இதுபற்றி நிதி ஆலோசகர் பத்மநாபன், “பொதுவாக அசெட் அலோகேஷனுக்காக மூன்று வகையான திட்டங்களை எடுத்துக்கொள்வார்கள். ஈக்விட்டி, கடன் சார்ந்த திட்டம் மற்றும் தங்கம். இதற்கு மிக முக்கியக் காரணம், இந்த மூன்றிலும் சிறிது சிறிதாகச் சேமிக்கலாம், தேவையானபோது உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இது எவ்வளவு சதவிகிதம் என்பது ஒருவருடைய முதலீட்டு இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் எவ்வளவு காலம் என்பதைப் பொறுத்தது. ஒரு முதலீட்டை ஆரம்பிக்கும்போது கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்ப்பதோடு, அதுவரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியமானது. அசெட் அலோகேஷன் என்பது திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பது போல. திருமணத்தின்போது இருவருடைய ஜாதகமும் சமன் செய்யப்படும். அதாவது, ஒருவருக்குக் கஷ்டம் வரும்போது, அடுத்தவருக்குச் சுகம் இருக்கும். இல்லாவிட்டால் இரண்டும் ஒன்றாக வந்தால் சமாளிப்பது கடினம். பிரித்து முதலீடு செய்திருந்தால், ஒன்றில் சரிவு ஏற்பட்டா லும், மற்றொன்றில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சமன் செய்துகொள்ள முடியும்” என்றார்.



‘‘என் முதலீடு அனைத்திலும் இருக்கும்!’’

பிரித்து முதலீடு செய்வது குறித்து தற்போது மஸ்கட்டில் வசித்துவரும் சின்னகிருஷ்ணனிடம் பேசினோம், “நான் அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலும், தங்கம், பங்குச் சந்தை போன்ற முதலீடுகளையும் மேற்கொண்டிருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்கூட ஈக்விட்டி, டெப்ட், பேலன்ஸ்டு என பல வகைகள் இருப்பதால் நிதி ஆலோசகரின் ஆலோசனையின்படி தேவைக்குத் தக்கபடி பல்வேறு வகைகளில் பிரித்து முதலீடு செய்திருக் கிறேன். இதனால் பெருமளவு நஷ்டம் தவிர்க்கப் படுகிறது” என்றார்.

7.முதலீட்டுக்குமுன் உணர்ச்சிவசப்பட வேண்டாம்!

பங்குச் சந்தை முதலீடாகட்டும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகட்டும் உணர்ச்சிவசப்பட்டால் உண்டாகும் விளைவு பற்றி நிதி ஆலோசகர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “பொதுவாக நாம் உணர்ச்சிவசப்பட்டு இருக்கும்போது முக்கியமான முடிவுகள் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்படும் நிலையில் (Emotional State) நமது மனது, சிந்தனை, செயல்கள் பேலன்ஸ்டாக இருப்பதில்லை. அதனால் இத்தகைய சூழலில் எடுக்கப்படும் முடிவுகள், முழுமையாகச் சாதக, பாதங்களை ஆராயாமல், அவசரகதியால் எடுக்கப்படலாம்.

முதலீடுகளிலும், நாம் பல நேரங்களில் முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிறோம். அத்தகைய முதலீடுகள் பெரும்பாலும் நமக்கு ஏற்றவைகளாக நம்முடைய எதிர்காலத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருப்ப தில்லை. நம்மை அதிகமாக உணர்ச்சிவசப்பட வைத்து, முடியாது என்று சொல்ல இயலாத நிலைக்குக் கொண்டு செல்பவை நம் சுற்றமும், உறவும் நம்மிடம் அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகள் தான். நம்முடைய பெரும்பாலான முதலீட்டுத் தவறுகள், இங்குதான் நிகழ்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாம் உடனடியாக, ஆன் தி ஸ்பாட் முடிவுகளை எடுக்காமல், சிறிது அவகாசம் எடுத்துக்கொள்வோமேயானால் நம்மால் பல கோணங்களில் யோசித்து ஒரு சரியான முடிவை எடுக்க முடியும். மேலும், சரியான உரிமம் வழங்கப்படாத உள்ளூர் நிதித் திட்டங்கள், உள்ளூர் நபர்களின் முதலீட்டு வாய்ப்புகள் நம் உணர்ச்சியைத் தூண்டும். இத்தகைய முதலீடு களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம்’’ என்றார்.



உணர்சிவசப்பட்டால் நஷ்டமே!

“உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முதலீட்டு முடிவுகளால் பெரும்பாலும் நஷ்டமே வந்து சேரும். அதனால் நான் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளும்போது, உணர்ச்சிவயப்பட்டு முதலீடுகளைத் தேர்வுசெய்ய மாட்டேன். நண்பர்கள், உறவினர்கள் முன்வைக்கும் முதலீட்டு திட்டங்களும், கவர்ச்சிகரமான விளம்பரங்களுமே நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும். அதனால் முதலில் தவிர்ப்பது நண்பர்கள், உறவினர்கள் சொல்லும் முதலீடுகளைத்தான்” என்றார் வடபழனியைச் சேர்ந்த சுரேஷ்.

8.முதலீட்டுக்குமுன் ஆராய்தல் அவசியம்!

எந்தவொரு நெறிமுறைப் படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டமும், தவறானதல்ல. ஆனால், அந்தத் திட்டம் நம்முடைய ரிஸ்க் மற்றும் தேவைக்கு ஏற்றதா என்பதை ஆராய்வது அவசியம். முதலீட்டுக்குமுன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்கிற விஷயம் குறித்து நிதி ஆலோசகர் சேஷய்யாவிடம் பேசினோம்.

“ஒவ்வொரு முறையும் முதலீடு செய்யும்போது சிறிது அவகாசம் எடுத்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து முதலீடு செய்தல் வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான அறிவு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அந்த முதலீட்டுத் திட்டத்தின் மீதான ரிஸ்க் எவ்வளவு என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

ஆனால், வெறுமனே மற்றவர்கள் சொல்லக் கேட்டு செய்யும்போது, முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால் ஏமாற்றி விட்டார்களோ என்கிற எண்ணம் உருவாகி சங்கடத்தை உண்டாக்கும்.

இன்றைய நிலையைப் பொறுத்தவரை, சந்தோஷம் தரும் விஷயம் என்னவெனில், பெரும்பாலான மக்கள் அவர்களாகவே முன்வந்து முதலீட்டு விஷயங்களை ஆராய்ந்து அதன் பின்னரே முதலீட்டை மேற்கொள்கிறார்கள்” என்றார்.



‘‘என் முதலீட்டின் மீது அக்கறை உண்டு!’’

‘‘என் பணத்தின் மீதும், நான் செய்யும் முதலீட்டின் மீதும் எனக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருந்துவிட முடியும் என்பதே என் எண்ணம்.

அதனால் நிதி ஆலோசகர்கள் முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்தாலும் அதுகுறித்த தகவல்களை, அந்தத் திட்டத்தின் கடந்தகால வளர்ச்சியை இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொண்டு, ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்த பின்னரே முதலீட்டை ஆரம்பிப்பேன். அதேசமயம், முதலீட்டுத் திட்டங்கள் குறித்த டெக்னிக்கல் விஷயங்களை நிதி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதிலும் கவனமாக இருப்பேன்.

இப்படி ஆராய்ந்து முதலீட்டை மேற்கொள்ளும் போது நஷ்டம் வந்தாலும் அதை இலகுவாக எடுத்துக்கொண்டு, முதலீட்டை பெருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்’’ என்றார் தன்னம்பிக்கையுடன் சென்னையைச் சேர்ந்த சாரதாமணி டெ.

9.முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடாதீர்கள்!

ஆரம்பத்திலேயே முதலீட்டை ஆரம்பிக்கும் போது, தேவைக்கான இலக்கை எளிமையாக அடைந்துவிடலாம் என்பதை எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் வி.நாயக்.

“பொதுவாகவே ஒரு செயலில் காலத்தைக் கடத்தாமல், சரியான நேரத்தில் தொடங்கும்போது விரைவாகச் செயல்படாவிட்டாலும், அந்தச் செயலானது எளிமையாக முடிந்துவிடும். ஆனால், காலம் கடந்து ஆரம்பிக்கும்போது விரைந்து செயல்படவேண்டியிருந்தும், அந்தச் செயலுக்கான திருப்திக்கு உத்தரவாதம் கிடையாது.

உதாரணமாக,  ஒருவர் தனது 25-வது வயதில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.3,000 முதலீடு செய்வதாகக் கொள்வோம். 12% எதிர்பார்க்கக்கூடிய வருமானம் கிடைத்தால், 30 ஆண்டுகள் கழித்து ரூ.1.04 கோடி  அவருக்குக் கிடைக்கும். ஆனால், இன்னொரு நபர் பத்து ஆண்டுகள் கழித்து தனது 35-வது வயதில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.4,500 முதலீடு செய்வதாகக் கொண்டால், அதே எதிர்பார்க்கும் வருமானத்தில் முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை ரூ.44.51 லட்சமாகவே இருக்கும். ஆக, காலம் தாழ்த்தி முதலீட்டை மேற்கொண்டு, அதிகமான பணத்தை முதலீடு செய்தாலும், இலக்கின்போது கிடைக்கும் வருமானம் குறைவு. அதனால் முதலீட்டு முடிவை உடனே ஆரம்பிப்பது நல்லது’’ என்றார்.



‘‘முதல் சம்பளத்திலிருந்து முதலீடு செய்கிறேன்!’’

இளம் வயதிலிருந்து முதலீட்டை மேற்கொண்டு வரும் வி.பாலாஜியிடம் பேசினோம். “முதல் சம்பளம் வாங்கியதும் சேமிக்க வேண்டும் என நினைத்து, 17 ஆண்டுகளுக்குமுன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 25. மாதம் ரூ.2,000-த்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தேன். வருமானம் உயர உயர என் முதலீட்டையும் அதிகரித்து வந்தேன். தற்போது அந்த முதலீடானது 20% வருமானத்தை வழங்கி வருகிறது. இடையிடையே தேவைக் காரணமாக அந்த முதலீட்டில் இருந்து பணத்தை எடுத்தாலும், முதலீட்டை மட்டும் நிறுத்தவே இல்லை. தற்போது அந்த முதலீட்டில் மாதம் ரூ.5,000 வரை முதலீடு செய்துவருகிறேன். எனக்கு ஆறு வயதில் குழந்தை இருக்கிறாள். அவளின் எதிர்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.2,000-த்தை தனியாக முதலீடு செய்து வருகிறேன். இப்போது முதலீடு செய்வதே என் ஹேபிட்டாக மாறி விட்டது” என்றார் தீர்க்கமாக.

10. போர்ட்ஃபோலியோ ரிவியூ அவசியம்!

மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் செய்தால் மட்டும் போதுமா எனில்,  அதற்கான பதில் இல்லை என்பதே. காரணம், அவை வளமான வாழ்க்கைக்கு அடிப்படை எனில், போர்ட்ஃபோலியோ ரிவியூ என்பது அந்த அடிப்படைக்கு ஆதாரமாக இருப்பது. போர்ட்ஃபோலியோ ரிவியூ பற்றி நிதி ஆலோசகரான ரமேஷ்பட்டிடம் கேட்டோம்.

“ஒருவர் செய்த முதலீட்டை 3 - 6 மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோ ரிவியூ செய்யவில்லை எனில், அந்த முதலீட்டைச் செய்ததற்கான  பலனை பெறமுடியாமல் போய்விடும். செய்திருக்கும் நிதித் திட்டத்தின்படி, சரியாகப் பயணப்படுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் நாம் செய்திருக்கும் முதலீடுகள் நமக்குத் தொடர்ச்சி யாக வருமானம் தருகிறதா என்பது தெரியும். ஒருவரின் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், 3-6 மாதங்களுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோ ரிவியூ செய்து கொள்வது அவசியம். நீண்டகாலம் எனில்,  ஆண்டுக்கு ஒருமுறை செய்யலாம்” என்றார்.

‘‘ரிவியூ செய்ததால்தான் வருமானம் உயர்ந்திருக்கிறது!’’

“நான் செய்திருக்கும் முதலீடு அதிகம். தவிர, எனக்கிருக்கும் குறுகியகாலத் தேவைகள் அதிகம். எனவே, நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோ ரிவியூ மேற்கொள்வேன். அப்போதுதான் என் முதலீடு சீராகச் செயல்படுகிறதா என்பது தெரியும். மேலும், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்டு, எடுக்க முடிகிறது. நான் மேற்கொள்ளும் போர்ட் ஃபோலியோ ரிவியூவுக்கு சிறு பணம்  செலவானாலும், முதலீட்டின் மீதான வருமானம் உயர்ந்திருக்கிறது” என்றார், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிதம்பரம்.

நிதித் திட்டமிடலில் அடிப்படையாக இருக்கும் பத்து முக்கிய அம்சங்கள் பற்றி சொல்லிவிட்டோம். இந்த அடிப்படை அம்சங்களை இனி நீங்களும் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் வளமாகும்.