எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்



வீடு முழுக்க என்னதான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும், ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான்.

பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே அழகுதான்.
இந்த ஊரில் இதுதான் முக்கியமான தொழில் என்பதால், இதன் பின்புலத்தை அறிந்துகொள்ள நூற்றாண்டு கண்ட ராயல் லுக் கடையின் உரிமையாளர் முகமது அப்பாஸிடம் பேசினோம்.
''எங்க தாத்தா காலத்தில் ஆரம்பமானது இந்த தொழில். கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலைச் செய்து வருகிறோம்.

சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் எங்களுக்கு நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.  
 இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை செய்கிறார்கள்.

வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் தருகிறார்கள்!.

இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வது மட்டுமல்ல, தேவைகேற்ப ஆர்டர் கொடுத்து செய்துவாங்கிக் கொள்ளவும் முடியும். அவர்களிடம் இருக்கும் டிசைன் மட்டுமல்ல, உங்களது விருப்ப டிசைன்களும் செய்துகொள்ளலாம். இயற்கையான நிறத்தில், கலர் இல்லாமல், தரமாக, உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ரேட் பேசி வாங்கிச் செல்ல இந்த ஊருக்கு விசிட் அடிக்கலாம்.