டிவிடெண்ட் பங்குகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

டிவிடெண்ட் பங்குகளை வாங்கும்போது...

டிவிடெண்ட் பங்குகளை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம். அவர் சொன்ன 10 விஷயங்கள்...

1. டிவிடெண்ட் தரும் பங்குகளை வாங்கும்போது, அதிக டிவிடெண்ட் தருகிறார்களா என்று மட்டும் பார்ப்பதைவிட, அதன் டிவிடெண்ட் யீல்டு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக டிவிடெண்டுக்கும் அதிக டிவிடெண்ட் யீல்டுக்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கின் சந்தை விலை 1,000 ரூபாயாக இருக்கிறது. இந்தப் பங்குக்கு 100% டிவிடெண்ட் வழங்கப்படுகிறது என்றால், முதலீட்டாளருக்கு ஒரு பங்குக்குக் கிடைக்கும் டிவிடெண்ட் ரூ.10. அதாவது, 1,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கிய பங்குக்கு டிவிடெண்டாகக் கிடைத்திருப்பது வெறும் 10 ரூபாய்தான். இங்கே, டிவிடெண்ட் யீல்டு வெறும் ஒரு சதவிகிதம்தான். 100% என கேட்டவுடன் அதிக டிவிடெண்ட் என தோன்றியபோதும் உண்மையில் நாம் போட்ட பணத்துக்கு கையில் கிடைப்பதோ குறைவாகவே இருக்கும் – பங்கின் விலை சந்தையில் அதிகமாக இருப்பதால்! சந்தை விலை குறைவாக உள்ள பங்குகளை வாங்கி இருக்கும்பட்சத்தில், இப்படி டிவிடெண்ட் கிடைக்கும்பட்சத்தில் லாப சதவிகிதம் அதிகரிக்கும்.

2. தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது சீராக டிவிடெண்ட் வழங்கி இருக்கிறதா,  ஆண்டுக்கு ஆண்டு டிவிடெண்ட் சதவிகிதம் அதிகரித்திருக்கிறதா போன்றவைகளை நிச்சயம் கவனிக்க வேண்டும். இந்த பத்து வருடங்களில் சந்தையில் இரண்டு பெரிய ஏற்ற, இறக்கங்களைப் பங்குகள் சந்தித் திருக்கும். அந்தமாதிரியான தருணங்களில் எவ்வளவு டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓர் ஆண்டு 100%, அடுத்த ஆண்டு ஒன்றுமே தரவில்லை எனில், அல்லது மிகக் குறைவாகத் தந்தால், சராசரி யீல்டு குறைந்துவிடும் என்பதால், அது டிவிடெண்ட் பங்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

3. நாம் பங்கு வாங்கும் நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடு எப்படி இருக்கும், அதன் சந்தைப் பங்களிப்பு அதிகரிக்கிறதா, குறைகிறதா, புதிதாக வரும் சந்தை மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு காலத்துக்குத்  தகுந்தாற்போல் மாற்றுப்பாதையில் இயங்குகிறதா என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.

4. வாங்கும் பங்கின் நிறுவன நிர்வாகம் சிறப்பாக இருக்கிறதா, புரமோட்டர்கள் யார், அவர்களின் பங்குகள் விற்கப்பட்டிருக்கிறதா, நிறுவனங்களின் கணக்குவழக்குகள் சரியாக நிர்வகிக்கப்படுகிறதா என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு முதலீடு செய்வது நல்லது.

நிர்வாகம் சரியில்லாதபோது, கடந்த காலச் செயல்பாடுகளை மட்டும் நம்பி வாங்கினால் 'ஃபர்ஸ்ட் லீஸிங்’ கதிதான் ஆகும்.

தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக டிவிடெண்ட் கொடுத்துவந்த அந்த நிறுவனம் திடீரென புகார்களில் சிக்கி முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பை சமீபத்தில் ஏற்படுத்தியது.



5. டிவிடெண்டுக்கு முதலீடு செய்யும்போது சந்தையில் நிலவும் சிறிய ஏற்ற இறக்கங்களை அதிகம் பொருட்படுத்தக்கூடாது. நாம் வாங்கிய பங்கின் விலை சற்று குறையும்போது (எந்தக் காரணத்தால் பங்கின் விலை குறைகிறது என்பதை அறிந்து கொண்டு) அதே பங்குகளில் மீண்டும் முதலீடு செய்யலாம். இதனால் வருங்காலத்தில் சந்தை ஏற்றம் காணும்போது நல்ல விலைக்குப் பங்குகளை விற்றுவிடலாம்.

6. முதலீட்டு முடிவுகள் தெளிவாக இருக்க வேண்டும். சந்தையின் சிறிய ஏற்ற, இறக்கங்களுக்கு எல்லாம் நம் முடிவை மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. டிவிடெண்டுக்கு என்று முதலீடு செய்கிறோமா அல்லது பங்குகளை லாப நோக்கில் வாங்குகிறோமா என்பதில் தெளிவாக முடிவு செய்துகொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும்.

7. ஒரு பங்கை டிவிடெண்டுக்காக வாங்கி இருந்தாலும், அந்தப் பங்கின் விலை மிக அதிகமாக அதிகரித்து நல்ல லாபத்தில் இருந்தால், அதில் ஒரு பகுதியைத் தாராளமாக விற்று லாபம் பார்க்கலாம். சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் அடிப்படை யில் விற்கலாம்.

பங்கு நல்ல லாபத்தில் இருந்தாலும், டிவிடெண்ட்களுக்கு 100 சதவிகிதம் வருமான வரி விலக்கு உண்டு என்றாலும், நான் டிவிடெண்டுக்காகத்தான் பங்கு வாங்கினேன் என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது. கொஞ்சம் நீக்குபோக்கு தேவை.

8. பெரிய குழுமங்களின் நிறுவனங்களில் முதலீடு செய்தோம் என்றால் அந்தக் குழுமத்தின் மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

9. டிவிடெண்டுக்காக முதலீடு செய்தாலும், ஒரே துறை சார்ந்த பங்குகளில் மட்டும் முதலீடு செய்யாமல் வெவ்வேறு துறை சார்ந்த பங்குகளிலும் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

10. நாம் பங்கு வாங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்தவையாக இருந்தால், உலகச் சந்தை நிலவரங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது. குறிப்பாக, டாலர், ரூபாய் கணக்குகளைக் கவனிக்க வேண்டும்.