என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை

திருப்புமுனை! - என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை



''வீட்டில் இருந்த கண்டிப்பும் ஒழுங்கும் சின்ன வயதிலிருந்தே என்னை பக்குவப்படுத்தியது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. விவசாயம் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க ஐ.ஐ.எம்.-ல் சேர்ந்தேன். அங்கு நம்மை பற்றி சுயமதிப்பீடு செய்யும் சில பாடங்கள் இருந்தது. அந்த பாடங்களைப் படித்தபோது நான் யார், அடுத்து என்ன செய்யப் போகிறேன்? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. நம்மால் நான்கு பேர் பயனடையக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.


அப்போது சிறப்பாகச் செயல்பட்டுவந்த ஒரு தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அங்கு தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதுதான் எனது பணி. அந்த நிறுவனத்தின் தமிழக திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் நான் செயல்பட்டேன். கிராமம் கிராமமாகச் சென்றதினால் பல்வேறு பகுதி மக்களுடைய அனுபவம், வாழ்க்கைமுறை, அவர்களுடைய தேவைகளை அறிந்துகொள்ள முடிந்தது.
இந்த அனுபவத்தின் உந்துதலால்தான் என்னைப் போல தன்னார்வ வாழ்க்கையை விரும்பிய சிலரோடு சேர்ந்து மதுரையில் தானம் அறக்கட்டளையைத் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை மூலம் களஞ்சியம் என்ற மகளிர் சுயஉதவி குழுவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினோம். களஞ்சியம் அமைப்பு இப்போது பன்னிரண்டு மாநிலங்களில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு குழுக்களைக்கொண்டு இயங்கி வருகிறது.
அடுத்ததாக கிராமப்புற நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் வயலகம் என்கிற அமைப்பைச் செயல்படுத்தத் தொடங்கினோம். முறையான நிர்வாக அமைப்பு, மேலாண்மை வழிகாட்டலோடு இணைந்த மேம்பாட்டு திட்டங்கள்தான் எங்களது நோக்கமாக இருந்தது. எங்களது அடுத்தகட்ட முயற்சியாக சுகம் என்கிற பெயரில் மக்கள் மருத்துவமனையை மதுரையில் செயல்படுத்தி வருகிறோம்.
தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நமக்கு நாமே உதவிக்கொள்வோம் என்கிற எங்களது முயற்சி உலகம் முழுக்கப் போய் சேரவேண்டும் என்பதே எனது ஆசை.''