எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சென்னிமலை - கைத்தறி போர்வை
ஈரோட்டிலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு ஊர்தான் சென்னிமலை. இங்கு பிரசித்திபெற்ற முருகன் மலைக்கோயில் இருக்கிறது. தமிழகத்தில் பல பகுதியிலிருந்தும் சென்னிமலைக்கு ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வந்துபோகிறார்கள். சாமி கும்பிட வருகிறவர்கள் அப்படியே நான்கைந்து போர்வைகளையும் வாங்கிக்கொண்டு போவது இங்கு சர்வ சாதாரணமான காட்சி.
பல வண்ணங்களில், பற்பல டிசைன்களுடன் தரத்திலும், நிறத்திலும் சென்னிமலை போர்வை தனிச்சிறப்பாக இருப்பதால் இதன் மவுசு இப்போதும் குறையவே இல்லை. இங்கு தயாராகும் போர்வைகள் அனைத்துமே கைத்தறி நெசவில் நெய்யப்பட்டவை என்கிறார்கள்.
சென்னிமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் சார்ந்த சுமார் ஐம்பதாயிரம் மக்கள் போர்வையை நெய்யும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுறவு மையங்களிலேயே விற்பனையும் செய்யப்படுகிறது. இந்த தொழிலில் பின்புலம் மற்றும் சென்னிமலை போர்வை பற்றி அறிந்துகொள்ள கூட்டுறவு விற்பனை மையமான சென்குமார் டெக்ஸின் மேலாளர் ஜெகநாதனை அணுகினோம்.
''எங்கள் முன்னோர் காலத்திலிருந்தே எங்களை அரவணைத்துக் கொண்ட தொழில் என்பதால் இங்கு வாழும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இதுதான் வாழ்க்கை. இங்கிருந்து மொத்தமாக விற்பனைக்கு வாங்குபவர்களைவிட சில்லறையாக சொந்த உபயோகங்களுக்கு வாங்குபவர்கள்தான் அதிகம்.
இங்கு தயாரிக்கப்படும் போர்வைகள் கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் இதன் ஆயுள் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. ஆனால், இயந்திரங்களால் தயாரிக்கப்படும் போர்வைகள் தண்ணீரில் நனைய நனைய நிறமும் மங்கிவிடும்; துணியும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் நைந்து கிழிந்துவிடும். இங்கு தயாராகும் போர்வைகளில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் நம்பி வாங்கிச் செல்லலாம்.
வெளியூர் வியாபாரிகள், மருத்துவமனை, விடுதிகள் போன்றவை மொத்தமாகவும் வாங்குகின்றன. ஆரம்ப காலங்களில் பிளைன் ரகங்கள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டது. இப்போது அனைத்து விதங்களிலும் போர்வைகள் தயார் செய்து விற்கிறோம்'' என்றார்.
இங்கு தயாரிக்கப்படும் ஜக்காடு வகை போர்வைகள் தனிச் சிறப்பானது. டிசைன் நேர்த்தியோடு நெய்யப்படும் இந்த ஜக்காடு வகை போர்வை கம்பளி போர்வை போல அடர்த்தியாக இருக்கிறது. பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமே விற்பனை நடப்பதால் முப்பது சதவிகித தள்ளுபடி விலையில் கிடைத்துவிடும். அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் அரசு மேலும் பத்து சதவிகித தள்ளுபடி கொடுக்கும். அப்போது வாங்குபவர்களுக்கு நாற்பது சதவிகித தள்ளுபடி கிடைத்துவிடும். 150 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு ரகத்துக்கு ஏற்ப போர்வைகள் கிடைக்கின்றன. தள்ளுபடி விலையில் 150 ரூபாய்க்கு வாங்கும் ஒரு போர்வையை வெளியூர்களில் 200 ரூபாய் வரை விற்கலாம் என்பது பிஸினஸ் ரகசியம்.
தேக்கமில்லாமல் எப்போதும் விற்பனை இருப்பதால் பழையது, புதியது என்கிற பிரச்னையே இல்லை. தலையணை உறை, துண்டு, கால்மிதிகளும் சில்லறை விலையில் தரமானதாக வாங்கிவர சென்னிமலை சரியான இடம். இனி ஈரோடு சென்றால் சென்னிமலைக்கு தாராளமாக ஒரு விசிட் அடித்து வரலாம்!