பணத்தைப் பெருக்க 10 கட்டளைகள்!

பணத்தைப் பெருக்க 10 கட்டளைகள்!


புத்தகத்தின் பெயர்: மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்

(Mad Money Journey – A Financial Adventure)

ஆசிரியர்: மெஹ்ரப் இரானி

பதிப்பகம்: ஜெய்கோ

பொருட்செல்வம் இல்லாதவருக்கு இந்த உலகத்தில் வாழ்வு கிடையாது என்பதைப் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். பொருளைச் சம்பாதித்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் பயன் படுத்தவும், சேமிக்கவும் தெரிந்திருந் தால்தான் இந்த உலகில் நாம் நினைப்பதுபோல வாழ முடியும் என்பதைக் கதை வழியாகச் சொல்லி யிருக்கிறார் 'மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்' என்கிற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மெஹ்ரப் இரானி. இவர் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனில் பொதுமேலாளராகப் பணியாற்றி வருகிறார்.



'பணம் பத்தும் செய்யும்’, 'பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்’ எனப் பல சொல்லாடல்களை நாம் கேட்காத நாளில்லை. பணத்துக்குப் பின்னால் நாம் செல்வதை விட்டுவிட்டு, கடின உழைப்பால் நாம் சம்பாதிக்கும் பணம் நமக்குச் சேவகம் செய்து பலமடங்காகப் பெருகுவது எப்படி என்பதை மும்பையில் பிரபல எலும்பு சிகிச்சை மருத்துவராக இருக்கும் ஜான் பிண்டோ என்கிற கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமாக, எளிதில் புரியும்படி சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இனி பத்தும் செய்யும் பணத்தைப் பாதுகாத்து பலமடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற 'பணவளக் கலையை’ மெஹ்ரப் இரானி வழியில் பார்ப்போம்.

மும்பை நகரில் வானுயர்ந்து நிற்கும் பல கட்டடங்கள் ஒன்றில் 46வது மாடியில், பென்ஸ் காருக்குச் சொந்தக் காரரான டாக்டர் ஜான் வசித்து வருகிறார். ஒருநாள் காரைவிட்டு இறங்கி சாலை யில் நடந்து செல்லும்போது மயக்கமாகி கீழே விழ, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார்.  ஆஸ்பத்திரியில் படுக்கையில் படுத்திருக்கும்போது, 45 வயதான டாக்டர் ஜான், தனக்கு திடீரென்று ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் தன்னை நம்பியிருக்கும் மனைவி, 20 வயது மகன், 18 வயது மகள், அம்மா ஆகியோர் என்ன செய்வார்கள், அவர்களுக்குத் தேவையான வற்றைச் சேர்த்து வைத்திருக் கிறோமா எனக் கவலைப்படுகிறார்.



தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இன்றைக்கு வெற்றி பெற்ற தொழிலதிபராக அர்மானி சூட்டில் வலம்வந்து கொண்டிருக் கும் விஜய் தேசாய்தான் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தவர். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது அவருக்குப் பலவிதங்களில் உதவி யரும் இவரே. இந்த நிகழ்வின் மூலம் இருவரும் மீண்டும் சந்திக்க, இருவரும் தங்களது நினைவலைகளுக்குள் மூழ்கிப் போகிறார்கள்.

டாக்டர் ஜான் எவ்வளவுதான் சம்பாதித் தாலும் அதை முறைப்படி நிர்வகிக்காததால், சொல்லிக்கொள்வதுபோல எதுவும் இல்லை. இதை அறிந்த விஜய் அவரை தன் செலவில் பல நாடுகளுக்கு அனுப்பி, பணம் குறித்த பத்து கட்டளைகளை அங்கிருக்கும் தனது நண்பர்களின் (அவர்களில் பாங்காக் விலைமாது, ஆப்கான் தீவிரவாதி, கென்யாவின் மாரத்தான் ஓட்டக்காரர் ஆகியோரும் அடக்கம். இவர்கள் விஜய்க்கு எப்படி அறிமுகமானார்கள், விஜயின் உதவியால் அவர்கள் எப்படி நல்ல நிலைமைக்கு வந்தார்கள், அவர்களின் படிப்பினை என்ன என்பதோடு இழையோடுகிறது இந்தப் புத்தகம்) மூலம் தெரிந்துவரச் செய்கிறார்.

இந்த உலகத்தில் அளவற்று இருப்பது பணம்தான். ஆனால், அதை எப்படிச் சம்பாதிப்பது, சம்பாதித்ததைத் திட்ட மிட்டுச் செலவழிப்பது எப்படி, பாதுகாப்பது எப்படி, முதலீடு செய்து அதன்மூலம் பணத்தைப் பெருக்குவது எப்படி என்கிற சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டால் நீங்களும் இனி ராஜாதான்.



இதோ அந்த பத்து கட்டளைகள்...

1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள்.

2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். தேவைக்கேற்ற மாதிரி யான இன்ஷூரன்ஸ் எடுங்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் கிடைக்கும். மணி பேக் பாலிசி’ எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமானவை.

3. எந்தவொரு சொத்து வாங்கும் போதும் அதன்மூலம் வருமானம் கிடைக்குமா எனப் பாருங்கள். சொத்து என்றைக்கும் பொறுப்பாக மாறக்கூடாது (உதாரணம், கடன் வாங்கி இடம் வாங்குவது. இதனால் கடனுக்கு வட்டி, சொத்து வரி எனக் கட்ட வேண்டிவரும். அந்தச் சொத்தை விற்றால் ஒழிய, உங்களுக்கு அதிலிருந்து வருமானமோ/ஆதாயமோ எதுவும் கிடைக்காது. அதை விற்பது வரை அது ஒரு 'டெட் அஸெட்’).

4. உங்கள் வருமானத்தைச் சரியான சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் (அதாவது, வங்கி டெபாசிட்டில் எவ்வளவு, பங்குகளில் எவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு போன்றவை). நீங்கள் பணத்தை மதித்தால் பணமும் உங்களை மதித்து உங்களிடமே பலமடங்காகத் திரும்பிவரும். 'அஸெட் அலோகேஷனில்’ நீங்கள் தெளிவாக இருந்தால் உங்களது வருமானம் அல்லது பணம் 90% சிறப்பாக நிர்வகிக்கப்படும்.

5. சேமிப்பையும், முதலீட்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். செலவைக் குறைத்து சொத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால், அதன்மூலம் வரும்படிக்கு வழியிருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.

அப்படி எதுவுமில்லை என்றால், அந்தச் சொத்தில் முதலீடு செய்வதில் உபயோக மில்லை. 'தேவையற்றதை வாங்குவதன் மூலம் தேவைப்படுவதை விற்க வேண்டிய கட்டாயம் பின்னாளில் ஏற்படக்கூடும்’ என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

6. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து தொடர்ந்து வருமானம் (running income) வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பெகுலேட்டிவ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். (தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல. அதற்கான பல காரணங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலர்/ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை.)

7. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பொறுமைகாக்க வேண்டியிருக்கும். அதுபோல, `Short term pain’-ஐ ‘long term gain’ ஆக்க பொறுமை அவசியம் தேவை. எது பங்கின் விலையைக் கூட்டுகிறது, குறைக்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுபோல முதலீட்டுக்கும், ஊகத்துக்குமான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். (an investor chases value while a  speculator chases price

8. வீடு வாங்குவதாக இருந்தால், பிராபர்ட்டி மார்க்கெட் மலிவாக இருக்கும்போது வாங்குங்கள். அதேசமயம், வட்டி விகிதம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக நல்லதொரு வட்டி விகிதத்தை – 'ஃபிக்ஸட்' அல்லது ஃப்ளோட்டிங்’ – தேர்ந்தெடுங்கள்.

9. உங்கள் பணத்தின்மேல் குறியாக இருக்கும் அரசாங்கம் (பலவிதமான வரிகள் மூலம் உங்கள் வருமானத்தில் கைவைப்பது), வங்கிகள் (கடன் வழங்குவது, முதலீடு செய்யச் சொல்வது), புரோக்கர்கள் ஆகியோரை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

சட்டப்பூர்வமான வழியில் அதிகப் பணம் ஈட்டி அதற்குக் குறைந்த அளவில் வரி கட்டுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

10. இந்தப் பயணத்தின் இறுதியில் நண்பன் விஜய் கூறியதுபோல, டாக்டர் ஜான் கங்கோத்ரி ஆசிரமத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிஜியை அணுக, 'பணம் உனக்கு சுதந்திரம் அளிக்காது. மாறாக, அது உன்னை அடிமையாக்கும். எனவே, நீ பணத்தை ஆளுபவனாக இரு; அதைப் பார்த்து பயப்படாதே, அதற்குப் பின்னால் பேராசை பிடித்து ஓடாதே. நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நிதி பற்றிய அறிவுதானே தவிர, பணம் இல்லை’ என்று கூறுகிறார்.

ஆக, பணம் சம்பாதிப்பதைவிட பெரிய விஷயம் 'தீர்க்கமாகத் திட்டமிட்டுப் பணத்தைப் பெருக்கி’ அதை நமக்குச் சேவகம் செய்ய வைப்பதுதான். 'நாம் தேவையற்ற பொருட்களை வாங்கினால், விரைவிலேயே நமக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்’ என்று நிதி உலகின் பிதாமகன் வாரன் பஃபெட் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, அநாவசியச் செலவைக் குறைத்து அத்தியாவசியத்தில் முதலீடு செய்தால்  நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!